கவிதைபாட நேரமின்றி
காதல் பாடிக்கொண்டிருந்த
கல்லூரி நாட்களின்
கலங்காத கறையிலிருந்து...
வெந்நீர் வற்றிவிட
குளிர்நீரில் ஊறவைத்து
வெந்த உடலின்
சூட்டைத் தணிக்க
மந்த நினைவுகளில்
மீள்பதிவிட்டு
நொந்த நாட்களின்
சூட்சுமங்களிலிருந்து...
சூழ்நிலை மறந்து
வீழ்நிலைக்குச் செல்ல
சூழ்ந்துவிட்ட மேகமாய் - எனை
வீழ்த்த நினைக்கும்
சோம்பலிலிருந்தும்...
விண்மீனில் விழிபதித்து
பெண்மீனை நிலவாக்கி
கண்கொட்ட விழித்திருந்து
கவிதை ரசித்த இரவுகளிலிருந்து..
காத்திருந்த காலங்களைக்
கடவுளுக்காய் செலவிட்டு
நீத்திருந்து தினந்துடித்த
விடலை நிமிடங்களின்
விதியிலிருந்து...
அடுக்கடுக்காய் நேரமிருந்தும்
கடுகடுப்பாய்ச் செலவிட்ட
அந்நிய நினைவுகளின்
ஆழத்திலிருந்து...
முரண்பாட்டில் எனைச்சேர்த்து
உடன்படுத்தி எனைத்திருத்தி
பரண்கட்டில் படுத்துறங்கி - உன்னில்
கடன்பட்ட வினாடிகளின் காயத்திலிருந்து...
உண்மைக்குள் படுத்துறங்கி
உயிர்முழுதும் மெய்சிலிர்க்க
உன்மெய்க்குள் தொலைந்துஉயிர்முழுதும் சிலிர்த்த வினாடிகள்...
பெண்ணீரில் பரிணமித்து...
மண்ணீரில் மனந்தொலைத்து..
கண்ணீரில் கரைந்துபோன
காதல் துளிமீதான காமத்திலிருந்து....
காதல் உயிர்த்திருக்கும்
காலம்வரை...உனக்கெனவே இந்த
ஊனுடம்பும், இன்னுயிரும்...
பிரிந்தபின் பிறிதொன்றென
சரியாது நம்காதல்...
புரிந்தபின்னேனும் உன்னுள்
சிரித்துக்கொள்...
ஒருநாள்
காத்திருத்தலும் சுகமெனக்
காலம் விதைக்கக்கூடும்...
காத்திரு கண்ணே காத்திரு...
உயிர் நீத்தாலும்
உன்மடி தேடித்தானிந்த
ஊனுறங்கும்.. காத்திரு....