செவ்வாய், 27 செப்டம்பர், 2011

செல்லாக்காசு..


ஆட்சியில் அமர்ந்தவன் நிதம்
காசுபார்க்க நினைந்ததில்
மீட்சி பெற வழியற்று
மாசுபட்டுப்போனது ஜனநாயகம்...

பிச்சையெடுப்பது குற்றம்தான்...
பிடுங்கித்தின்பது திறமை...??
சுயலாபப்பித்தின்முன்
பிச்சையெடுக்கிறது மனிதாபிமானம்...

தனியார்மத்தில் நிலைகுலைந்து
சில கோடிகள் ருசித்துக் கொழுத்ததில்
கல்வியும் களவானிகையில்
சிக்கிச் சிதைந்தது...
கல்விக்கடவுளின்  நெற்றியில்
காசைப் புதைத்து
பள்ளிகளிலேயே தொடங்கி - பண
மாசைப் பொதித்தது அரசியல்..

மதிப்பெண் பெற்றவன்
செருப்பு துடைக்கிறான் - பண
மதிப்பு மிக்கவன்
மருத்துவம்படிக்கிறான்...

கல்விக்குச் செலவிட்ட
பாழும் பணத்தை
வாழும் மனிதரிடம்
வாங்கிக் கொழுக்கிறான்...

சில்லறையில் சிக்கிய
சிதறுண்ட கல்வியால்
கல்லறையில் சிக்கி
கண்ணீர்வடிக்கிறது மனிதம்....

விலையற்ற கல்வியும்
காசுபார்க்கப் பணிந்ததில்
கலைமகளும் இங்கே
விலைமகளாய்ப்போனாள்....

எல்லாம் காசாகிப்போனது
இந்த பூமி -இதில்
செல்லாக்காசாகிப்போனது
நம் வாழ்க்கை...