திங்கள், 5 டிசம்பர், 2011

நீக்குப்போக்கு

இந்த
நீக்குப்போக்கு
புரிவதேயில்லை...
ஊழல் ஒழிப்புச்சட்டத்தில்
உடன்பாடில்லையென 
பாராளுமன்றத்தில் அமளி... 

பணக்கார வயிறுவளர்க்க 
ஏழ்மையின் வயிற்றிலடிக்கும் 
புதிய ஜனநாயகம்... 
கேள்விகேட்போர் வாயடைக்க 
இல்லந்தோரும் இலவசங்கள்... 
இன்புற்ற பிச்சைக்காரர்கள் 
வீதியெங்கும்... ?!  

வாக்குச்சீட்டினடியில்
தஞ்சம்புகுந்த திருப்தியில்

எது புண்ணியம்?
எது கண்ணியம்?
போதிக்க முடியாமல்
சிரித்தபடி பித்தன் காந்தி... 

ஊழல் கோடிகள்  விதைக்கப்பட்டதில் 
புரையோடிப் புதைக்கப்பட் 
இறையாண்மை... 

முயலாமையோ இயலாமையோ
பீடித்துத் தின்றதில் காலிழந்து
கோலூன்றித் திரியும்
நேற்றைய இளைஞனின்
தோற்ற நரைமுகம்...
 
ஒன்றுக்குப் பத்தாய் பளீரிடுகிறது..
நேர்மையற்று நொறுங்கிய
ஜனநாயகக் கண்ணாடியில்...

திகார் சிறை புகார்
வீணென்ற வெற்றிக்களிப்புகள் 
சற்று ஆச்சர்யத்துடன்
கேள்விக்குறியிடுகின்றன
ஊழல் எங்கள் தேசிய குணமென்று..?! 

எல்லாம் கண்ணெதிரிலேயே
அரங்கேறியிருக்கின்றன... 
என்றாலும்...

இந்த நீக்குப்போக்கு
புரிவதேயில்லை...
நாளைய வல்லரசின்
நொண்டிக்கால்களுக்கு...