யார் யாரோ அந்த
வருகைப் பதிவேட்டில்
தம்மைப் பதிந்துகொள்கிறார்கள்...
சில வரவுகள் மீது
பலருக்கு சந்தேகம்...
சிலருக்குத் தம் வரவில்கூட...
ஆரம்பவிதிப்படியே
அத்தியாயம் துவங்குகிறது...
பின்பு விதிகள் தத்தமக்கென
துவக்கப்படுகின்றன...
பலர் தமக்கான வாழ்க்கையைத்
தாமே தேர்ந்தெடுக்கிறார்கள்...
சிலர் பிறர் வாழ்வைத்
தமதாக்கிக் கொள்கிறார்கள்...
எல்லாமும் தமக்காய் இருப்பதே
எல்லோரின் ஏக்கமும் - ஆனால் இதுவரை
எதுவும் எதுவாயும் இருந்ததேயில்லை...
எதிர்பார்ப்புகள்கூட
எதிர்ப்புகளாகிவிடுகின்றன
சிலருக்கு..
பலருக்கு எதிர்ப்புகளே
எதிர்பார்ப்பாயும்...
ஏமாற்றுவோர் ஏமாற்றுவதற்காகவும்
ஏமாளிகள் ஏமாறுவதற்காகவும்
இதைத் தவறாமல் பயன்படுத்துகின்றனர்...
இறுதிவரை யாரும் தம்
சுயத்தை அடையாளப்படுத்துவதில்லை...
அதை விரும்புவதுமில்லை...
எல்லோரின் சுயமும் அந்தக்
காணாமல்போனோரின் பட்டியலில்
தவறாமல் இடம்பெற்றுவிடுகிறது...
உண்மைதான்...
எல்லோரும் அந்த வருகைப்பதிவேட்டில்
தம்மைப் பதிந்துகொள்கிறார்கள்...
எப்பொழுதும்போல ஆரம்பவிதிப்படியே
அத்தியாயங்கள் ஆரம்பிக்கின்றன...
பலர் தமக்கான முகமூடிகளைத்
தாமே தேர்ந்தெடுக்கிறார்கள்...
சிலர் பிறர் முகமூடிகளைப்
பிடுங்கி அணிந்துகொள்கிறார்கள்...