வியாழன், 3 மே, 2012

தடம்..






உன் சன்னதி 
மிருகத்தை மனிதனாக்குகிறது..
மனிதனை ஞானியாக்குகிறது... 
பின்னர் கடவுளாயும்.. 


என் கவிதைகள் 
தீண்டவியலாத 
அயல்கிரகத்து
மாளிகையில் நீ 
அயர்ந்துகொண்டிருக்கிறாய்...

உன் வாசல்வரை
பயணித்து உன்னால்
வாசிக்கப்படாமலேயே
திரும்பிவிடுகிறது
என் கவிதை... 

உன் தடத்தைப் பின்பற்றுவோர் பக்தர்கள்...
உன் பாதத்தைத்
தொட்டுணர்வோர் சித்தர்கள்...

படைத்தது நீ....  
ஆனால் பகுத்தது..? 

பதில் வேண்டுபவர்க்கு
பதிலாய்க் கேள்வி கிடைக்கிறது...
உனக்கென்ன தகுதி...? 

பக்தனின் கண்ணீர் 
சித்தனுக்கே கேட்பதில்லை...
பின்னர்
புத்தனுக்கு எப்படிக் கேட்கும்..?? 

பகுதி விகுதிகளைப்
பரிசீலிக்கும் முன்னரே
தீர்க்கப்பட்டுவிடுகிறது
என் தகுதி... 

வாழ்க்கைச் சக்கரத்தில் 
சுற்றிச்சுற்றி வந்தாலும் 
உன் தடத்தைச்
சந்திக்க முடிவதில்லை - என்றாலும்
உன்னைத் தவிர வேறொன்றைச்
சிந்திக்கவும் மனம் ஒப்பவில்லை...

உன்னைத் 
தொட்டுணர முயன்று
தோற்றுப்போன
தீண்டத்தகாத வார்த்தைதான்
இந்தக் கவிதையும்...