வியாழன், 23 ஆகஸ்ட், 2012

ஒப்பாரி


வீதியெங்கும்
தோற்ற மறைவுக் குறிப்புகள்
செதுக்கப்பட்ட
பலகோடிக் கல்லறைகள்...

மலர்ந்து சில நாட்கள்கூட
நிறைவுபெறாத
பல்லாயிரம் உயிர்கள்
சமாதியினடியில்
சமாதானம் பேசிக்கொண்டிருந்தன

அதனிடையே
காதலின் ஒட்டுமொத்த
தகிப்பில் கரைந்துகிடந்தன
அந்த உடல்கள்... முன்பொருநாளில்...

அவள் அவனாயும்
அவன் அவளாயும்...
உருமறந்து பிதற்றியது
காதல்..

இப்பொழுது
அவளைப்புதைத்த குழியில்
நடுகல் நட்டுக்கொண்டிருந்தான் அவன்...
அவன் கல்லறைக்கு
மலர்வளையம்
வைத்துக்கொண்டிருந்தாள் அவள்...

மார்பிலடித்தபடி
கதறியழுதுகொண்டிருந்தது
காதல்...