திங்கள், 5 டிசம்பர், 2011

நீக்குப்போக்கு

இந்த
நீக்குப்போக்கு
புரிவதேயில்லை...
ஊழல் ஒழிப்புச்சட்டத்தில்
உடன்பாடில்லையென 
பாராளுமன்றத்தில் அமளி... 

பணக்கார வயிறுவளர்க்க 
ஏழ்மையின் வயிற்றிலடிக்கும் 
புதிய ஜனநாயகம்... 
கேள்விகேட்போர் வாயடைக்க 
இல்லந்தோரும் இலவசங்கள்... 
இன்புற்ற பிச்சைக்காரர்கள் 
வீதியெங்கும்... ?!  

வாக்குச்சீட்டினடியில்
தஞ்சம்புகுந்த திருப்தியில்

எது புண்ணியம்?
எது கண்ணியம்?
போதிக்க முடியாமல்
சிரித்தபடி பித்தன் காந்தி... 

ஊழல் கோடிகள்  விதைக்கப்பட்டதில் 
புரையோடிப் புதைக்கப்பட் 
இறையாண்மை... 

முயலாமையோ இயலாமையோ
பீடித்துத் தின்றதில் காலிழந்து
கோலூன்றித் திரியும்
நேற்றைய இளைஞனின்
தோற்ற நரைமுகம்...
 
ஒன்றுக்குப் பத்தாய் பளீரிடுகிறது..
நேர்மையற்று நொறுங்கிய
ஜனநாயகக் கண்ணாடியில்...

திகார் சிறை புகார்
வீணென்ற வெற்றிக்களிப்புகள் 
சற்று ஆச்சர்யத்துடன்
கேள்விக்குறியிடுகின்றன
ஊழல் எங்கள் தேசிய குணமென்று..?! 

எல்லாம் கண்ணெதிரிலேயே
அரங்கேறியிருக்கின்றன... 
என்றாலும்...

இந்த நீக்குப்போக்கு
புரிவதேயில்லை...
நாளைய வல்லரசின்
நொண்டிக்கால்களுக்கு...

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

செல்லாக்காசு..


ஆட்சியில் அமர்ந்தவன் நிதம்
காசுபார்க்க நினைந்ததில்
மீட்சி பெற வழியற்று
மாசுபட்டுப்போனது ஜனநாயகம்...

பிச்சையெடுப்பது குற்றம்தான்...
பிடுங்கித்தின்பது திறமை...??
சுயலாபப்பித்தின்முன்
பிச்சையெடுக்கிறது மனிதாபிமானம்...

தனியார்மத்தில் நிலைகுலைந்து
சில கோடிகள் ருசித்துக் கொழுத்ததில்
கல்வியும் களவானிகையில்
சிக்கிச் சிதைந்தது...
கல்விக்கடவுளின்  நெற்றியில்
காசைப் புதைத்து
பள்ளிகளிலேயே தொடங்கி - பண
மாசைப் பொதித்தது அரசியல்..

மதிப்பெண் பெற்றவன்
செருப்பு துடைக்கிறான் - பண
மதிப்பு மிக்கவன்
மருத்துவம்படிக்கிறான்...

கல்விக்குச் செலவிட்ட
பாழும் பணத்தை
வாழும் மனிதரிடம்
வாங்கிக் கொழுக்கிறான்...

சில்லறையில் சிக்கிய
சிதறுண்ட கல்வியால்
கல்லறையில் சிக்கி
கண்ணீர்வடிக்கிறது மனிதம்....

விலையற்ற கல்வியும்
காசுபார்க்கப் பணிந்ததில்
கலைமகளும் இங்கே
விலைமகளாய்ப்போனாள்....

எல்லாம் காசாகிப்போனது
இந்த பூமி -இதில்
செல்லாக்காசாகிப்போனது
நம் வாழ்க்கை...

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

சதி...


ஏனோ இவ்வாழ்க்கை
இனிமையானதாய் இருக்கவில்லை
இக்கணத்தில்...

பால்க்காரனின் பரிவுப் பேச்சும்
ஆட்டோக்காரனின்
அன்பான உரையாடலும் கூட
இரட்டை அர்த்த வசனங்களாகவே
இதயத்தைக் காயப்படுத்துகின்றன...

வற்றாத நீரூற்று
வழிந்தெங்கோ ஓடுவதாய்
உற்றாரின், பெற்றோரின்
குற்றப்பார்வைமுன் கூனிக்குறுகுகின்றேன்...

கைம்பெண்ணெனக்
க(ல)ளவாட முனைவோரும்
உடனிருந்தே என்
உயிரறுக்கும் கூட்டமும்....

இன்றா? நாளையா? என்று
இழுத்தடிக்கப்படும்

சமச்சீர்க் கல்வியின்
புதிய பாடத்திட்டம்போல்
விழிக்கிறது வாழ்க்கை...

கண்ணகி கைம்பெண்ணான
கதையில் விடுபட்ட பகுதியாய்....
இளம் விதவைகளின்
தீக்குளிப்புப் போராட்டம்....

ஒருவேளை
உடன்கட்டை ஏறும் வழக்கம்கூட
இன்றும் இருந்திருக்கலாம்....?!

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

காலி

 அழகிய நேர்த்தியான
வேலைப்பாட்டுடன் மிளிர்கிறது அது....
கூடவே கூடுதலாய்
பகட்டுத்தனமும் திமிரும்...
அதற்கென உயிரேதுமில்லை...
உணர்வும் இருப்பதாகத் தெரியவில்லை...
வாக்கெடுப்பில் வென்றால்

அதில் அமர்ந்துகொள்ளலாம்...

அமர்வதற்கோ ஆட்டுவிப்பதற்கோ
வேறு எந்தத் தகுதியும் தேவையில்லை...
அது அதை எதிர்பார்ப்பதுமில்லை...

தேர்ந்தெடுக்கப்பட்ட வல்லூறுகள்
அதில் அமர்ந்துகொண்டே
வாக்களித்த சடலங்களைக்
கூறுபோட்டு உண்ணலாம்....

வெ(ற்)றிக் கூத்தாடியபடியே
சிலகாலம் அதிலேயே ஓய்வெடுக்கலாம்...
கூத்து ஓயும்வரை கூட...

இப்பொழுதும் கூட
நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறது
அந்த நாற்காலி...
இன்று அமர்பவர்களும்
இனியொரு நாற்’காலி’ யென்று...  

நீதி :  1) பல்லக்கில் வைத்தாலும் பாம்பின் குணம் மாறாது...
          2) வழியெங்கும் மாலை, மரியாதை - சுடுகாட்டுப்பிணம்....

வியாழன், 17 பிப்ரவரி, 2011

வாக்குச்சீட்டு




சாலையில் ஆங்காங்கே
சிற்சில பிச்சைக்காரர்கள்..
ஜடாமுடி தாடியுடன்
பலநாட்கள் சுத்தம்செய்யாத
அழுக்குடம்புடன்...
கையில் அனுமதிச்சீட்டுடன்
வரிசையில் நின்றனர் உணவுக்காக...

வீதியெங்கும் குழல்விளக்கு
அலங்காரங்கள்...
வாக்குப்பிச்சை கேட்ட
தலைவரின் சுவரொட்டிகள்...

ஊரே பற்றி எரிந்தது...
பற்பல அலங்கார
வெளிச்சப்பந்துகளில்...
அந்தப் பளீர் வெளிச்சத்தில்
அவர்கள் எதையோ தேடிக்கொண்டிருந்தார்கள்...

வீதியெங்கும்
பலகோடிப் பிச்சைக்காரர்கள்...
ஜடாமுடிதாடியற்று
பலநாட்கள் சுத்தம்செய்யாத
மன அழுக்குடன்..
வரிசையில் நின்றனர்
கையில் வாக்குச்சீட்டுடன்
ஓட்டுக்கு 500 பணமாம்...

ஆமாம் அந்தப் பளீர்வெளிச்சத்தில்
அவர்கள் தேடிக்கொண்டிருந்தது
எங்கோ பல மைல்களுக்கு அப்பால்
இருட்டில் தொலைத்த ஜனநாயகத்தை....
 நன்றி : படங்கள் - தமிழ் மக்கள் குரல்