ஏனோ இவ்வாழ்க்கை
இனிமையானதாய் இருக்கவில்லை
இக்கணத்தில்...
பால்க்காரனின் பரிவுப் பேச்சும்
ஆட்டோக்காரனின்
அன்பான உரையாடலும் கூட
இரட்டை அர்த்த வசனங்களாகவே
இதயத்தைக் காயப்படுத்துகின்றன...
வற்றாத நீரூற்று
வழிந்தெங்கோ ஓடுவதாய்
உற்றாரின், பெற்றோரின்
குற்றப்பார்வைமுன் கூனிக்குறுகுகின்றேன்...
கைம்பெண்ணெனக்
க(ல)ளவாட முனைவோரும்
உடனிருந்தே என்
உயிரறுக்கும் கூட்டமும்....
இன்றா? நாளையா? என்று
இழுத்தடிக்கப்படும்
சமச்சீர்க் கல்வியின்
புதிய பாடத்திட்டம்போல்
விழிக்கிறது வாழ்க்கை...
கண்ணகி கைம்பெண்ணான
கதையில் விடுபட்ட பகுதியாய்....
இளம் விதவைகளின்
தீக்குளிப்புப் போராட்டம்....
ஒருவேளை
உடன்கட்டை ஏறும் வழக்கம்கூட
இன்றும் இருந்திருக்கலாம்....?!