வியாழன், 24 டிசம்பர், 2009

இயேசு




சிலுவை சுமந்திடினும் புன்னகை பூத்தாய்
அழுகும் உடலிதென ஆசை துறந்தாய்
எழுக யின்னுயிரென் றேங்கித் தீய்ந்த
கழுமரத்தின் கண்ணீர் காண்...

ஏசுகின்ற நாவுக்குத் தேன்குடிக்கத் தந்திடு
தூசுபோ லிவ்வுலகு வாழ்க்கைப் பிறர்க்கென்ற
நேசம் விதைத்திடு வேசம் தவிர்த்திடென்ற
ஏசனே தெய்வம் நமக்கு

செறிவுமிக்க அன்பே செயற்கறு வித்து
அறிவுசால் அன்பூன்றி ஆக்கம்கொள் என்றும்
தெரிவிக்கு மிவ்வுயிர் ரெல்லார்க்கும்  புனித
கிறித்துமஸ் நன்னாளின் வாழ்த்து

புதன், 23 டிசம்பர், 2009

உழவு செய்வோம்






பிசாசென மண்பயனைப் பிய்த்துக் கிழித்த
ரசாயனத்தால் காயம்பட்டுக் கற்பிழந்த பூமி...
விசாரிப்பே யின்றிக் கொலைசெய்த  மாக்கள்
பிசாசிடம் மண்டியிட் டனர்...



அவயங் களொழிந்து பாலையாம் மண்ணும்
சவங்கள் பெருகி வறுமையும் வாட்டும்
புவன மழிந்தபடிப் பிச்சை யெடுக்கும்
விவசா யமிழந்த நாடு..


சாயம் வெளுத்தபின் தானுணர்ந் தென்னபயன்
காயம் பெருகிப்பின் மண்ணுயிர் மாய்ந்ததிங்கே
மாயம் போனதொழில் மீண்டிடுமா நம்மிடையே
சாயம் போன உழவு..



அளவிலா வாழ்நாள் அழிந்துக் கருகும்
பிளவுபட்ட மண்பாலை யானது - காய்ந்து
களம்தேடி செத்தொழிந்து மாயும் வயிறும்
உழவற்றுப் பொய்த்த நிலம்..


பழுந்தொழில் வாழ்வில் முதியோர் சொல்லி
விழுந்திடல் நன்றே யிளையரிட மென்றும்
உழுந்தொழி ழொன்றே வுயர்தொழில்மற் றெல்லாம்
பழுதாக்கும் இவ்வுலகைக் கொன்று


உழவே உயிரென்று ஊன்றிடுவோம் விதையை
நிலமங்கை தான்மிளிர ஒன்றிடுவோம் மண்ணில்
இழவொழித்து மீட்சிபெற இன்றே தொடங்கி
பலமுறையில் விதைப்போம் பயிர்



ஒன்றிணைந் தோங்கி யுரைப்போம் உலகத்தை
வென்று வாழ விவசாயமே வழியென்றும்...
இன்றிந்த நாட்டிற்கு மண்நலம் ஈயுமே
என்றும் மனிதநல மென்று

வியாழன், 17 டிசம்பர், 2009

நா


துள்ளித் திரியும் எலும்பற்ற நாதினமும்
அள்ளித் தெளிக்குமே அன்பை - சமயத்தில்
வேம்பு புசித்தக் குரங்கெனச் சீறிப்போய்ப்
பாம்புபோல் கக்குமே நஞ்சு...

செவ்வாய், 15 டிசம்பர், 2009

உடம்பு


தளிர்மேனி தான்சிறப்பு என்றே குதித்து
தளர்மேனி கண்டு வெறுக்கும் இளமை
தளிர்மேனி மூப்பெய்தல் கண்டு தெளியும்
வளர்ச்சிதை வொன்றே உடம்பு....

வெள்ளி, 11 டிசம்பர், 2009

அமைதிப்படை




பயங்கர வாதம் பயந்தொழியும் முன்னர்

இயங்குரக ஆயுதங்கள் ஈந்தபடி இன்றும்

இயங்காது செத்தொழியும் மக்களே நீவிர்

பயங்கொள் அமைதிப் படை

செவ்வாய், 8 டிசம்பர், 2009

லாடம்...



இதோ
இன்னுமொரு மனம்
புறப்பட்டுவிட்டது...
முகமூடிபோட
இலவசப்பயிற்சியென...
 
அறங்காவலர் அறைக்குள்
அடங்கி பயந்து சென்றது - அவர்
அலுவல் அலுவலென
அகங்காரம் பேசிக்கொண்டிருந்தார்
அலைபேசியில்...
கைப்பைக்குள் சில
காகிதங்கள் அளித்தார் ஒருவர்..
வேலை என்ன வேலை..
நீங்கதான் முதல்வேலையென
பல்லிளித்தது பதவி...
சொல்லிளிந்து வெளியேறியது மனது...
 
கோவிலுக்குள் நுழைந்து
அர்ச்சகர் எங்கென எட்டிப்பார்த்தது...
கடுகடுப்பாய் ஸ்தோத்திரம் சொல்ல
கடவுள் உதடு பிதுக்கினார்....
அன்பளிப்போடு வந்தவரைப்பார்த்து
அங்கம் உருக நின்றார் அர்ச்சகர்...
அசந்துப்போன மனது இடம்பெயர்ந்தது..
 
விறைத்து நின்ற காவல்துறை
முறைத்துப்பார்த்தது மனதை...
கைப்பையுடன் வந்தவர்கண்டு
தொப்பை பெருக்கெடுக்க
எழும்பிச் சிரித்தது....
குப்பையான மனது
சிலும்பிப் பறந்தது...
 
வங்கிக்குள் நுழைந்து
வசந்தம் தேடியது...
வாயில் பல்குத்தியபடி
வங்கி மேலாளர்...
நோயில் படுத்த ஒருவரிடம்
நாய்போல் பேரம்...
கதிகலங்கி மனது
பேயாய் ஓடியது....
 
சட்ட அலுவலகமும் மனதைச்
சட்டை செய்யவில்லை...
செய்யப்பட்ட தவறுகளுக்கு
விலைபேசி விடுதலை அதன்
விலையாய் பேசப்பட்டது...
 
மாநகராட்சி அலுவலகம்
திறந்தே கிடந்தது...
அலுவலர்களோ தேநீர்க்கடையில்
திறந்துகிடந்தனர் - வெவ்வேறு
வேலைக்கென மனகவலைகளுடன்
பரந்து கிடந்தனர் பலர்...
 
பலரும் பலவித
முகமூடிகள் தரித்து
ருத்ர தாண்டவமாட
அரசு அலுவலகங்களில்
கால்வைக்க மறுத்த மனது
சேறுபூசப்பட்ட
தலைவரின் சுவரொட்டியாய்
தேய்ந்து தவித்தது...
 
பின்னர்
புரிந்து தெளிந்தது...
எல்லா முகமூடிகளும்
ஒரே லாடம் கொண்டுதான்
அடிக்கப்பட்டிருந்தன...
லஞ்சம் அந்த லாடம்....