செவ்வாய், 8 டிசம்பர், 2009

லாடம்...



இதோ
இன்னுமொரு மனம்
புறப்பட்டுவிட்டது...
முகமூடிபோட
இலவசப்பயிற்சியென...
 
அறங்காவலர் அறைக்குள்
அடங்கி பயந்து சென்றது - அவர்
அலுவல் அலுவலென
அகங்காரம் பேசிக்கொண்டிருந்தார்
அலைபேசியில்...
கைப்பைக்குள் சில
காகிதங்கள் அளித்தார் ஒருவர்..
வேலை என்ன வேலை..
நீங்கதான் முதல்வேலையென
பல்லிளித்தது பதவி...
சொல்லிளிந்து வெளியேறியது மனது...
 
கோவிலுக்குள் நுழைந்து
அர்ச்சகர் எங்கென எட்டிப்பார்த்தது...
கடுகடுப்பாய் ஸ்தோத்திரம் சொல்ல
கடவுள் உதடு பிதுக்கினார்....
அன்பளிப்போடு வந்தவரைப்பார்த்து
அங்கம் உருக நின்றார் அர்ச்சகர்...
அசந்துப்போன மனது இடம்பெயர்ந்தது..
 
விறைத்து நின்ற காவல்துறை
முறைத்துப்பார்த்தது மனதை...
கைப்பையுடன் வந்தவர்கண்டு
தொப்பை பெருக்கெடுக்க
எழும்பிச் சிரித்தது....
குப்பையான மனது
சிலும்பிப் பறந்தது...
 
வங்கிக்குள் நுழைந்து
வசந்தம் தேடியது...
வாயில் பல்குத்தியபடி
வங்கி மேலாளர்...
நோயில் படுத்த ஒருவரிடம்
நாய்போல் பேரம்...
கதிகலங்கி மனது
பேயாய் ஓடியது....
 
சட்ட அலுவலகமும் மனதைச்
சட்டை செய்யவில்லை...
செய்யப்பட்ட தவறுகளுக்கு
விலைபேசி விடுதலை அதன்
விலையாய் பேசப்பட்டது...
 
மாநகராட்சி அலுவலகம்
திறந்தே கிடந்தது...
அலுவலர்களோ தேநீர்க்கடையில்
திறந்துகிடந்தனர் - வெவ்வேறு
வேலைக்கென மனகவலைகளுடன்
பரந்து கிடந்தனர் பலர்...
 
பலரும் பலவித
முகமூடிகள் தரித்து
ருத்ர தாண்டவமாட
அரசு அலுவலகங்களில்
கால்வைக்க மறுத்த மனது
சேறுபூசப்பட்ட
தலைவரின் சுவரொட்டியாய்
தேய்ந்து தவித்தது...
 
பின்னர்
புரிந்து தெளிந்தது...
எல்லா முகமூடிகளும்
ஒரே லாடம் கொண்டுதான்
அடிக்கப்பட்டிருந்தன...
லஞ்சம் அந்த லாடம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக