திங்கள், 13 செப்டம்பர், 2010

லஞ்சமெனும் பரிகாரம்

தகுதிக்கு மீறின ஆசைகளுடன் ...
கற்பனைகளுடன் அந்த
வழிபாடுகள் தொடங்கின...

"மதிப்பெண் குறைவுதான் என்றாலும்
மருத்துவனாகனும் என் மகன்..."
"அரசுப்பணி எனக்கே எனக்கு
அள்ளித்தா பாரதமாதா..."

"இந்த முறையேனும் அந்த
இனிய வாய்ப்பு தாராய்.." யென
ஏழைகள் சலுகைகளையும்
ஏய்த்துப் பிடுங்கவும்கூட
பல்வேறு திசைகளிலிருந்தும்
பல்லாயிரம் வேண்டுதல்கள்...

"சாமியால் ஆவதில்லை - ஒரு
சாத்தானால் ஆவதுண்டு... "
சாமிகோவில்ப் பூசாரி பணத்திற்காய்
சாத்தான் பூசாரியானான்..

கூட்டம் முண்டியடித்தது...
பணம் கொடுத்தால்
பத்தும் நடக்குமென
பரிகாரம் சொன்னான் சாத்தான்..

பெட்டிகள் கைமாறின...
சில கருப்பாய் இருந்தன...
"பரவாயில்லை....
லஞ்சப்பணமிது... இதில்
கருப்பென்ன சிவப்பென்ன..?"
சிரித்தான் சாத்தான்..

அருகே
கதறிக்கொண்டிருந்த பெண்ணை
கத்தியால் குதறியபடி
உதிரம் உறிஞ்சி
ஆளுக்கொரு குவளை கொடுத்துத்
தினந்தோறும் பருகச் சொன்னான்...

இப்பொழுது எல்லாச் சாத்தான்களும்
உதிரம் உறிஞ்சிக் குடித்தபடி
மட்டற்ற மகிழ்வுடன் வெளியேறின....

ஆனால் பாவம்...
அங்கே குற்றுயிரும்
குலையுயிருமாய் பரதமாதா....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக