வெள்ளி, 24 செப்டம்பர், 2010

பொய்...


(நண்பர் துரையவர்கள் வரிகளின் பாதிப்பில்... )

மேலும் தொடரவழியற்று
தத்தளிக்கிறது வாழ்க்கை...

வறுமை பிச்சை கேட்டது..
பணமோ
வறுமைக்குப் பிச்சையிடத்
தயாராயில்லை...

மறுக்க முடியவில்லை...
இயலாமை நெஞ்சில் சாட
வழியற்று வாழ்வு
இரையாகிவிடுகிறது...
பொதிந்துவிடுகிறது அந்த
முகமூடிக்குள்...

யாருக்காகவோ எதற்காகவோ
தோண்டப்பட்ட குழி..
இடுகாட்டில் சிரித்தபடி... ..

என்னாலும் முடிகிறது
உதடுகள் சிரித்தபடி...
உண்மைகள் அழுதபடி...

என்னசெய்ய..?
பொய்ப்பிம்பங்கள்
மனதைச் சாட
வெட்கி மனம் நொந்து
வழியின்றி அணிந்துகொள்கிறேன்...
அந்த முகமூடி..

விற்கவோ... வாங்கவோ...
பேசவோ... ஏசவோ...
பாசத்திற்கும் நேசத்திற்கும்கூட
தேவைப்படுகிறது
இந்த முகமூடி...

வாழ்வின் அத்தியாவசியத்
தேவைகளாய் அது
லாடம் கட்டப்பட்டுவிட்டது...
இனித் தவிர்க்கவியலாது...

சுயலாபத்திற்காக பிஞ்சிலேயே
பொருத்தப்பட்டுவிடுகிறது..
பொய் எனும்
அந்த முகமூடி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக